கானல் நீர் கனவுகள்
சென்னை மாநகரத்தின் புறநகர் பகுதி உறங்கும் நேரம் , இரவு ஒன்பதாக இருந்த காலம் அது. எண்பது களில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு மாடி வீட்டின் , ஒரு பத்துக்கு பன்னிரண்டு அறையில் , சுவரின் உள்ளே பொருத்தப்பட்ட மங்கலாக இரவு விளக்கு வெளிச்சம் உலாவ தயாராகிக்கொண்டிருந்தது. அந்த அறையில் , பழுப்பு நிற பாயின் மேல் விரிக்கப்பட்ட தடியான போர்வை படுக்கையில் , நான்கு வயது மழலையும் , நாற்பது வயது இளம் பாட்டியும் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். அந்த மழலை பாட்டியின் கன்னத்தை தடவி , எழில் அழியா பாட்டியின் கதைகளையும் , தாலாட்டையும் கேட்டு துயில் கொள்ள ஆயத்தமானள். ‘ செல்லம்மா , கண்ணு முடிக்கோ. நானு கதை சொல்றேன். கேளு” பாட்டியின் கதை கேட்க மர ஜன்னல் வழியாக தென்றலும் அதன் செவியை நுழைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தது. “சரி மா” கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் அந்த சிறு பொன்வண்டு. “ஒரு ஊர்ல பாபு ன்னு ஒருத்தர் இருந்தாரு , அவருக்கு இரண்டு பசங்க” நாள் முழுவதும் வேலை செய்து ஒய்ந்து போன அந்த கைகள் , சற்றும் தளராமல் மழலையின் மார்பில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தது. “ஹ்ம்ம்” கூர்ந்து கவனித்த பட...