நிழலாடும் பிம்பங்கள்
இளம் சிவப்பு நிற கதிர்கள் நீல வானில் விளையாடும் மேகங்களை மெருகேற்றி, மெய் தரும் கசப்பை காட்டிலும், பொய் தரும் இன்பத்தால் என் கண்களுக்கு விருந்தளித்துக் கொண்டிருந்தது. பேருந்து வேகமாக முன்னே செல்ல என் எண்ணங்களோ பின் நோக்கி சென்றது. கல்லூரியில் முதல் நட்பு இறுதி வரை அதே போல் தொடர்ந்தால் அவர் பாக்கியசாலி யாக இருக்க வேண்டும். முதல் நட்பு முடிவு பெற்றிருந்தால் அவர் அனுபவசாலியாக இருக்க வேண்டும். சில நேரங்களில், சில மனிதர்களை நாம் மறக்க நினைக்காமல் மறக்கிறோம். மறந்துவிட்டோம் என்பதை நினைவூட்ட சில நொடிகள் தேவை. முதல் வருடம் என்னுடைய நட்பு பாராட்டியவர்களில் சிலர் அதே போல் இன்று பேசுவதில்லை. மூன்று வருடம் வரை அயல் நாட்டினர் போல இருந்தவர்கள் இன்று எதிர்பார்க்காமல் என்னிடம் சிநேகம் பாராட்டுகிறார்கள். நம் எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் ஏற்றார் போல நம் நட்பு வட்டம் மாறிக்கொண்டே இருக்கும். இது அனைவருக்கும் இயல்பானதே. மாற்றம் நிகழ்த்தும் மாற்றத்தையே நாம் கவனிக்க வேண்டும். என்ன மாற்றம்? எதற்க்காக மாற்றம்? ...