இடிபாடுகளில் சிக்கிய நினைவுகள்
முதல் என்ற வார்த்தைக்கு அனைவர் மனத்திலும் தனி இடம் இருக்கும் . முதல் வாழ்த்து , முதல் காதல் , முதல் முத்தம் . இதெல்லாம் என்றும் அடி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும் . அதே போல் தான் முதல் வீடும் . சிலருக்கு நான் கூறுவது விசித்திரமாக இருக்கலாம் . எனினும் , ஒரே வீட்டில், பிறந்தது முதல் இருபது வருடங்கள் வரை வசித்திருந்தால் நீங்கள் உணர்ந்திருப்பீர் . அதை பிரியும் தருணத்தில் ஏதோ ஒரு விதமான இழப்பை . மேலும் அதை அழிக்க ப் போகிறார்கள் என்றால் , உன்னுடன் இளைப்பாறிய ஒரு தோழனின் முடிவை காணும் வலியை தரும் . வயது ஐந்து நாட்கள் இருக்கும் , அது என்னை தழுவிக் கொண்ட போது . இருபது வருடங்களாக என் கனாக்களைத் தேக்கிவைத்துள்ளது . என் தாய் ஓய்வெடுக்க என்னை அந்தத் தரையையே தாங்கச் செய்தாள் . தன்னைப் போல் என்னைத் தாங்கும் என்ற நம்பிக்கையில் . என் கால்களால் அதிகமாக உதைத்த இடம் . நான் தவழும் நாட்கள் தொடங்கி இன்று கம்பீர நடைபோட...