இடிபாடுகளில் சிக்கிய நினைவுகள்
முதல் என்ற வார்த்தைக்கு அனைவர் மனத்திலும் தனி இடம் இருக்கும். முதல் வாழ்த்து , முதல் காதல் , முதல் முத்தம் . இதெல்லாம் என்றும் அடி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அதே போல் தான் முதல் வீடும். சிலருக்கு நான் கூறுவது விசித்திரமாக இருக்கலாம். எனினும், ஒரே வீட்டில், பிறந்தது முதல் இருபது வருடங்கள் வரை வசித்திருந்தால் நீங்கள் உணர்ந்திருப்பீர். அதை பிரியும் தருணத்தில் ஏதோ ஒரு விதமான இழப்பை. மேலும் அதை அழிக்கப் போகிறார்கள் என்றால், உன்னுடன் இளைப்பாறிய ஒரு தோழனின் முடிவை காணும் வலியை தரும் .
வயது ஐந்து நாட்கள் இருக்கும், அது என்னை தழுவிக் கொண்ட போது .இருபது வருடங்களாக என் கனாக்களைத் தேக்கிவைத்துள்ளது. என் தாய் ஓய்வெடுக்க என்னை அந்தத் தரையையே தாங்கச் செய்தாள். தன்னைப் போல் என்னைத் தாங்கும் என்ற நம்பிக்கையில். என் கால்களால் அதிகமாக உதைத்த இடம். நான் தவழும் நாட்கள் தொடங்கி இன்று கம்பீர நடைபோடும் நாட்கள் வரை என் ரேகைகளால் தேய்ந்த இடம். அன்புடன் பாட்டி ஊட்டியஅன்னத்தை, யாருக்கும் தெரியாமல் தோட்டத்தில் துப்பியதைப் புதைத்துக் கொண்டு ரகசியக்காவலனாக இருக்கிறது. பாதுகாக்க இயலாமல் தவிக்கிறேன், என் கிறுக்கல்களைப் பாதுகாத்த அழகான சுவர்களை.
மூன்று சக்கர மிதிவண்டியால் சுவரைச் சண்டைக்கு இழுத்த நாட்களில், தன்னைப் போல அசராமல் நிற்க கற்றுக்கொடுத்தது அது. இருள் சூழ்ந்த அறைகளைக் கண்டுப் பயந்த நாட்களும் ,நிலாச்சோறுச் சாப்பிட்டு மதியை ரசித்த நினைவுகளும் இன்றும் என் முன்னால் ஜொலிக்கின்றது. வாசலில் தொங்கிய கிளிஞ்சல் மணிகளை இழுத்து விளையாடுகையில் அதன் கூக்குரலை எதிரொலித்து அன்னையிடம் மாட்டிவிட்ட சுவர்கள். தேக்குமரச் சொகுசுநாற்காலியில் தூர்தர்ஷன் மட்டும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிப் பெட்டியின் முன் , ஷக்திமானையும் மகாபாரதத்தையும் புரியாதப் பாஷையாகினும் புரிதலுடன் பார்த்த காலங்கள் .சிறு கால்களை எக்கி மின்விசிறியின் மாற்றுக்குமிழைத் தொட முயற்சித்த நாட்கள் .பழையப் பெண்டுலம் கடிகாரத்தில் சாவிதருவதை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்தக் காலங்களிலும், வெவ்வேறு பாடலுக் கேற்ற நடனம் என்று நான் மட்டும் சொல்லி அனைவருக்கும் நகைச்சுவை அளித்த தருணங்களிலும் தெரியவில்லை அழிந்து போவன இவையென்று.
தெருவில் விளையாடியப்பிள்ளைகளை ஆ வென வேடிக்கைப் பார்க்கையில் என்னுடன் கைக்கோர்த்தத் தோழன் பால்கனிக் கம்பிகள். துருப்பிடிக்க ஆரம்பித்தக் கம்பிகளால் கைகளைக் கிழித்துக் கொண்டது முதல், பருவம் அடைந்த வயதில் என் முதல் உதிரம் உதிர்த்த இடம் வரை அங்கே உள்ளது. என் முப்பாட்டனின் சுங்கியத் தோலைச் சின்னஞ்சிறு விரல்களைக் கொண்டுத் தேய்த்து நான் செய்த முதல் ஆராய்ச்சி அங்கே தான். வாரம் ஒரு முறை வரும் பாலார் தண்ணீரைப் பிடிக்க முதல் முதல் நான் வாங்கியச் சிறுகுடம், அதிலிருந்து விழுந்தச் சிறுதுளிகளின்னும் மின்னும் அங்கே. வீட்டின் பின்புறம் தழைத் தோங்கியக் கொய்யா மரத்தில் பழங்கள் பறித்ததும், என் கூந்தலின் நீளத்தை அளந்தக் கண்ணாடியின் கிண்டல்களும், மாமனின் கல்யாணத்திற்கு நிறைந்த வீட்டில் ஊஞ்சலுக்கு நடந்தச் சண்டைகளும், முப்பாட்டன் மறைந்தாலும் அவரை உயிர்பித்து விடுவது போல இருக்கும் அவரது கைத்தடியும், பூப்பறிக்கும் சாக்கில் வீட்டின் சுற்றுச் சுவர்களில் மனதில் சிறு பயத்துடன் நடந்த இடங்களும் மறைந்து போகும் என்று எண்ணியதில்லை. பாட்டி எனக்குக் கூந்தல் சீவிய போது அரியாசனம் அமைத்த படிகட்டுகள். என் பெரியப் புகைப்படத்தை ஆண்டுகளாகத் தாங்கி தன் ஒரு பகுதியை வெளிபடுத்தாமல் ஒளித்துக் கொண்டிருக்கும் சுவர்கள். இனி நீங்கள் புகைப்படங்களில் மட்டுமே நிலைபெற்றுத்திகழப் போகின்றீர்கள். என்னை முழுவதும் பார்த்த ஒரே உயிரற்ற ஜீவன்;உயிர்ப்பெற்றிருந்தால் என் கணவன் என்னும் ஸ்தானத்தை அளித்து நான் காத்திருப்பேன். இந்த அழிவுகளிலிருந்து உன்னை மீட்டிருப்பேன். அன்னையோ பத்து மாதம் தாங்கினாள்; என் இல்லமோ என்னை இருபது ஆண்டுகள் தாங்கியுள்ளது. இருபது நொடி பழகிய மனிதனின் இறப்பில் கூட இடிந்து போகிறோம் நாம். உன்னை இழக்கப் போவதை எப்படித் தாங்குவேன்.கடப்பாரைகளும் பாரந்துாக்கும் கருவிகளும் உன் அழகைச் சின்னா பின்னமாக்கப் போகின்றன.என்னோடு விரல் கோர்த்த பால்கனிக் கம்பிகளைத் தூக்கி எறியப் போகின்றார்கள். என் உறுப்பைத் துண்டிக்கும் வழிக்கு நிகர் இந்த வலி.
ஒரு வீடு என்பது வெறும் கல், மண் கொண்டுக் கட்டப்பட்டச் சாதாரணச் சின்னமாகத் தோன்றலாம். ஆனால் அவ்வீடும் அவ்வீட்டில் செதுக்கப்பட்ட நினைவுகளும் என்றும் அழிக்க முடியாதது. ஆறு அடி ஊஞ்சல் மாட்டி அழகாய் சிரிக்கும் முற்றம், அடையாளம் இல்லாமல் அழிந்து போகப் போகின்றது. கர்வம் தரித்து வரவேற்கும் தேக்குமரக் கதவுகளின் கதை முடியப்போகிறது. வாழ்த்துக் கூறி வரவேற்கும் வரவேற்பறை வீணாகிப் போகப்போகிறது.
நாகரிகக் குடியிருப்பில் காணாத ஒரு அரிய அற்புதம், விசாலமான பூஜை அறை. அதில் வலது சுவர் முழுவதும் தாங்கி நிற்கும் பாட்டன் முப்பாட்டன் பாட்டிகளின் புகைப்படங்கள், ஒரு குடும்பவரைபடம் போல இருக்கும். ஒரு தெய்வீக உணர்வு அறை முழுவதும் நிறைந்திருக்கும்.உயிர் நீத்த ஜீவன்களின் அன்பானப் பார்வையை அவ்வறையில் உணர்வேன். அந்தச் சுவரின் அதிர்ஷ்ட காலம் நிறைவு பெற்று நிலை குலைந்து மறைந்து போகப்போகின்றது. ஒரு அடி அளவிலிருந்து இன்று ஐந்தடி வளர்ந்த என்னை தினந்தினம் அளவெடுத்தப் படுக்கையறையும்,அதில் முப்பது வருடங்களாக விரைந்துச் சுற்றும் மின்விசிறியின் ஓட்டமும் நின்று விடப் போகின்றது. இன்றைய இளைஞர்கள் அறியாத மர பீரோவையும், கயிற்றுக் கட்டிலும் கொண்ட அறையில், விலைமதிப்பற்று தேக்கி வைத்த நகைகளும், பணமும் வேறு இடத்துக்கு சென்றுஅவ்வறையை அநாதையாக்க போகின்றது. கீரை கடைந்தச் சட்டியில் சாதம் போட்டு உருண்டை பிடித்துக் கைகளில் தரும் என் பாட்டியின் பக்குவமறிந்த அந்தச் சமையலறை அரைநாளில் அழியப் போகின்றது.
எங்கள் பாட்டன் அளித்தப் பொக்கிஷம் பொசுங்கிப் போவதை காணக் கண்களுக்குச் சக்தியில்லை.’நிலையற்ற இவ்வுலகில் சாதாரண வீட்டுக்கு இவ்வளவு பெரிய உரையா?’ என்று வினவும் அனைவருக்கும் கூறுகிறேன்; அது வெறும் வீடல்ல; என்னுடன் வாழ்ந்து வளர்ந்த ஒரு தோழன்.சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் விரைவில் நமக்கு வந்து விட்டால் நாம் மிகுந்த துன்பத்திலிருந்து விடுபடலாம். எனினும் நம் இயல்பு அதுவல்ல. முடிவை அறிந்தும் அறிய மறுக்கும் ஒரு பெண்ணின் முதல் சிற்றுரை இது.

Comments
Post a Comment