திரு;மதி!

“ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ? அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையா?” என்ற வைரமுத்து எழுத்துக்களின் உண்மையை சிலர் அனுபவித்திருப்பார்கள். 

அதில் ஒருத்தி நான். சில கால சுழற்சிகளின் அர்த்தங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வதே வாழ்க்கையின் பாதியாக மாறிவிட்டது. புரிந்த சில பக்கங்களின் அழகை ரசிக்க கற்றுக் கொண்டால், சலனங்களில் சோர்வு நேராமல் தவிர்க்கலாம். அப்படி ஒரு அழகான  பக்கத்தை விவரிக்க எண்ணி இந்த உரையை எழுதுகிறேன்.




கல்லூரி நாட்களில் கவிதைகள் அதிகமாக எழுதுவேன். அப்படி எழுதும் சில கவிதைகளில் உணர்ச்சி குறிகள் அதிகமாக பயன்படுத்துவேன். அதை சரியான இடங்களில் உபயோகிக்கும்படி கருத்துக்கள் வந்தது. நானும் அதை மனதில் கொண்டு பல வருடங்களாக என் உணர்ச்சி குறிக்கு சரியான இடத்தை தேட தொடங்கினேன். அந்த தேடல் ஒரு அரைப்புள்ளியிடம் என்னை சேர்த்தது. 

ஒரு பக்குவப்பட்ட உறவை தேடி அலைந்த எனக்கு எட்டு மாதம் முன்னர் ஒரு சாப்ட்வேர் என்ஜினீயரின் அறிமுகம் கிடைத்தது. 90ஸ் சிங்கிள் களின் தற்போதைய சமூக வலைத்தளமான செயல்படும் ஒரு மேட்ரிமோனி மூலம் தான் அவர் அறிமுகமானார். இருபதுக்கும் மேற்பட்ட என்ஜினீயர்களிடம் பேசி களைத்து போன எனக்கு, இந்த என்ஜினீயர் ஏதும் புதிதாக பேச போவதில்லை என்ற எண்ணம் மிகுதியாக இருந்தது. இருப்பினும், இதுவே கடைசி வரன் என்றும், இதற்கு மேல் லவ் மேரேஜ் தான் என்ற முடிவில் என்னை விட என் அம்மா தெளிவாக இருந்தார். மேலும் அதே நேரத்தில், அமெரிக்காவின் ஹஎச்1பி வீசா லோட்டெரியும், கொரோனாவும் தன் ருத்ர தாண்டவத்தை ஆட தொடங்கி, என் வாழ்க்கையே பிஎச்.டி திசையை நோக்கி திரும்பிக்கொண்டிருந்தது.

“ஹாய், திஸ் இஸ்…” என்று ஆரம்பித்த அவரின் குறுந்தகவல், சற்று நேரத்தில் நாற்பது நிமிட தொலைபேசி உரையாடலாக மாறியது. பொதுவாக முதல் உரையாடல்கள் சுமூகமாகவே முடியும். இரண்டு, மூன்று களில், முழுமையாக முடிந்து விடுவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு எண்ணி, சிங்கிள் பசங்க பாடலை ஜாலியாக நண்பர்களுடன் கேட்டுக்கொண்டிருந்தேன். 

இரண்டாம் நாள் குறுந்தகவலில், என் வலைப்பதிவு லிங்கையும், புத்தகங்களின்  லிங்கையும் அனுப்பும் படி கேட்டுக் கொண்டார். கேட்ட நொடியே என், 

மைண்ட் வாய்ஸ்: “எப்படியும் படிச்ச அப்பறம் நீங்க எனக்கு லைஃப் பார்ட்னர் இருக்குறது விட, ஃப்ரண்டா இருந்தா ரொம்ப சந்தோஷமா இருப்பேன்னு சொல்லி, ஃப்ரண்ட் ஸோன் பண்ணிருவான்” என்று கூறியது.

இருப்பினும் கேட்ட மரியாதைக்கு லிங்க்  களை அனுப்பி வைத்தேன். குறிப்பாக நான் எந்த புத்தகத்தையும் முதலில் படிக்கும் படி கூறவில்லை. 

“நான் உன்னோட விண்ட்ஷிஇல்டு ஸ்டோரீஸ் (Windshield stories) இப்போ தான் படிக்க ஆரம்பிச்சேன். ரொம்ப நல்லா இருக்கு” என்று குறுந்தகவல் அடுத்த நாள் வந்தது. நன்றி கூறிவிட்டு நீண்ட நாள் கழித்து சந்தித்த ஒரு தோழியிடம் உரையாடிக் கொண்டிருந்தேன்.

சில மணி நேரத்தில் “புக் முழுசா படிச்சிட்டேன். வேற லெவல். ஃப்ரீயா இருக்கறப்போ சொல்லுங்க, பேசலாம்” என்று குறுந்தகவல் வந்தது. தகவல் கண்டு திகைப்பும், ஆச்சரியமும் என் முகத்தில் போட்டியிட்டு கொண்டிருந்தது. . 

இதுவரை நான் எழுதிய புத்தகத்தை என் அம்மா கூட அவ்வளவு சீக்கிரம் படித்து முடிக்கவில்லை. சில நெருங்கிய நண்பர்கள் அரை குறையாக படித்து வைத்திருந்தனர். அப்படி இருக்க, அவர் ஒரே மூச்சில் படித்தது ஆச்சரியமாக இருந்தது. 

என் முகத்தின் மாறுதலை கண்ட தோழி “என்ன ஆச்சு?” என்று கேட்டாள்.

“எல்லாம் இந்த மேட்ரிமோனி ஸ்டோரீஸ் தான். ஒரு பையன் பேசிட்டு இருக்கான். என் புக் ஒரே நாள்ல படிச்சிருக்கான். அதான் ஷாக் ஆகிட்டேன்” என்றேன். இருவரும் பேசி சிரித்துக் கொண்டிருந்தோம். மேலும் தோழி சென்றவுடன், அவருடன் உரையாடல் தொடர்ந்தது.

“ரொம்ப யதார்த்தமா இருந்தது. எனக்கு ரொம்ப கனெக்ட் ஆகார மாதிரி இருந்தது புக். அண்ட் முக்கியமா இது முழுக்க உங்கள பத்தி இருந்துச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்று அடுக்கிக் கொண்டே போனார்.

மைண்ட் வாய்ஸ்: புக் பிடிச்சிருக்கா? இல்ல உன்ன பிடிச்சிருக்கா?

எதுவாக இருந்தாலும், அன்றைய நாள் பேசியதில் தெரிந்த ஒரு விஷயம், அவர் நான் சந்தித்த ஆண்களை விட வித்தியாசமான உணர்வை தந்தார். குறிப்புகளால் என் எழுத்து அவரை தலை கீழ் திருப்பி விட்டது என்பதை உணர்த்தினார். கொஞ்சமும் நான் இதை எதிர்பார்க்கவில்லை. இப்படி நான் அவரை இம்ப்ரஸ் பண்ண, அவர் என்னை இம்ப்ரஸ் பண்ண, ரெண்டு பேருக்கும் பிடித்து போக, கனடா அமெரிக்க பார்டர் எப்போது திறப்பார்கள் என்று காத்திருக்க,  கடைசி வரை திறக்காமல், வீடியோ காலிலே கல்யாணம் முடிவு செய்து, மாசக் கணக்கில் பேசி, நிச்சயம் முடித்து, கல்யாணம் முடித்து இன்றோடு மாதம் ஒன்றாகி விட்டது. 

என் ஆச்சரிய குறிகள் ரசித்த அந்த அரைப்புள்ளி இன்று கனடாவில் குவாரன்டைனில் தனியாக இருக்கிறது. என் வாழ்க்கையின் பக்கங்களில் மிகவும் அழகான பக்கம் இது. ஒரு வேளை நான் புத்தகம் எழுதாமல் இருந்திருந்தால், அதை படிக்க எண்ணாமல் அவர் இருந்திருந்தால் இதெல்லாம் நடந்திருக்குமா? இந்த கேள்விக்கு பதில் இல்லை. 

எனினும் அன்று அவரும் நானும் எங்கள் முயற்சியில் போட்டியிட்டு உறவை நிறுவ ஆரம்பித்தோம். வெவ்வேறு சூழ்நிலையில் வளர்க்க பட்டவர்களாயினும், இருவரின் நடு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எங்கள் உறவை நிறுவிப்  பக்குவப்படுவோம் என்ற நம்பிக்கையில், திருமதி. அக்ஷய கிருத்தி யான பின்  நான் எழுதும்  முதல் உரையை  நிறைவு செய்கிறேன்.


Comments

  1. ஒரு புத்தகம் படித்தது போல் மிக அழகாக இருந்தது. மேலும் இது நிகழ்ந்தவை என்பதால் எனக்கு இது கூடுதல் மகிழ்ச்சியை அளித்தது. நீங்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க என் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  2. Beautiful writing... And the story behind ur love, it was just cute <3

    ReplyDelete
  3. அப்படியே ஒரு 2 அல்லது 3 தாமரையின் வரிகள் மற்றும் ஹாரிஸின் இசை சேர்த்தால் - சத்தியமா ஒரு GVM ஸ்டைல் romantic படம் கிடைத்து விடும். அருமை அருமை - அதுவும் குறிப்பாக அந்த வரி "எனினும் அன்று அவரும் நானும் எங்கள் முயற்சியில் போட்டியிட்டு உறவை நிறுவ ஆரம்பித்தோம்" : வேற லெவல். வாழ்த்துக்கள் சகோதரி.

    நீங்கள் கூறியது போல - "வெவ்வேறு சூழ்நிலையில் வளர்க்க பட்டவர்களாயினும், இருவரின் நடு நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் எங்கள் உறவை நிறுவிப் பக்குவப்படுவோம் என்ற நம்பிக்கையில் " நகர்ந்தாலே அநேகமானோரின் வாழ்க்கை அழகாக இருக்கும்.

    இன்னும் வாழக்கையில் நிறைய உணர்ச்சி குறிகள் நிறைந்து, மென்மேலும் தங்கள் படைப்புகள் "உலா" வர பிரார்த்திவனாய் - அன்பு சகோதரன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

துயரம்