பயணங்கள் - சிற்ப உலகம்
சென்னைக்கு மிக அருகில் என்று ஏலம் போட்டு நம்மை ஈர்க்கும் வையக வணிகத்தில், சென்னைக்கு அருகில் இருந்தும் 21 ஆண்டுகளாக நான் போகாத இடம் மாமல்லபுரம். அருகில் இருந்தால் அருமை தெரியாது என்பார்கள். அது உண்மைதான்.நண்பர்களின் குடும்பத்துடன் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் தொடங்கிய பயணம். பழக்கப்பட்ட வழிதான்.எனக்கு.. ஏனெனில் மூன்றைரை வருடமாக என்னை செதுக்கி கொண்டிருக்கும் என் கல்லூரியின் வழி.
பல்லவர்கள்!! இந்த வார்த்தைக் கூறியவுடன் உங்களுக்கு என்ன நினைவில் வரும்? வரலாற்றுப் பாடத்தில் எப்போதோ கேட்ட வார்த்தை என்ற நினைப்பு வரும். வெறும் வார்த்தைகளில் இவர்களை மதிப்பிட முடியாது என்று செயலில் காண்பித்த கலைவிஞ்ஞானிகள்... கல்கியின் புத்தகங்களும் ஒரு வகையில் என் தமிழ் ஆர்வத்திற்கு காரணம். சிவகாமி சபதம் படித்த அனைவருக்கும் மகாபலிபுர வரலாறு நிச்சயமாகத் தெரிந்திருக்கும். மகேந்திரப் பல்லவர் கண்டக் கனவு இந்தச் சிற்பங்கள் நிறுவப்பட்ட நகரம். அவருடையக் காலத்தில் அதை நிறைவேற்ற முடியவில்லை. எனவே தந்தையின் கனவை நிறைவேற்றுவதில் ஆர்வம் கொண்ட அவர் மகன் நரசிம்மப் பல்லவரால் நிறுவப்பட்டது இந்தச் சிற்ப நகரம். மகேந்திரனின் கனவு மட்டும் அல்ல, பலருடைய கனவுகளை நிறைவேற்றினார் நரசிம்ம பல்லவர் ( பார்த்திபன் கனவு படித்தவர்களுக்கு புரியும் ).
திரைப்படங்களுக்கு முன்னோட்டம் தருவது போல, சிற்பக் களஞ்சியத்துக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்ததுப் புலி குகைகள். அது மாமல்லபுரம் போகும் வழியில் கம்பிரமாக வரவேற்றது.
வரை கலை வித்தகர்கள் உருவாக்கும் செயற்கைப் புலிகளைக் கண்ட இந்தக் கண்களுக்கு,கண்ணைப் பறிக்கும் வண்ணங்களற்று , பார்வை அற்றவனும் உணரவேண்டும் என்ற எண்ணத்துடன் செதுக்கிய புலிகளின் முகங்களை காணும் பாக்கியம் கிட்டியது.
மாமல்லபுரம் அடைந்ததும் முதலில் பழைய கலங்கரை விளக்கத்தைக் காண கால்கள் பாறைப் படிகளை நோக்கி நடந்தது. உச்சி வெயில் நேரத்திலும் அதன் உச்சியில் சில்லென்று காற்று, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல். இயற்கையில் என்னை இழப்பதை என்றும் விரும்புபவள் நான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி ஒரு அமைப்பு. வெறும் பாறைகள் கொண்டு உருவாக்கப்பட்ட கலங்கரை விளக்கம். அருகில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன கலங்கரை விளக்கம் இருப்பினும் இதன் அழகே என்னை மெய் சிலிர்க்க வைத்தது.
மீண்டும் நடை பயணமாக சற்று தூரம் சென்ற பிறகு ஒரு அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தோம். கலங்கரை விளக்கம் முதலில் எப்படி இயங்கியது, இப்போது எப்படி இயங்குகிறது என்று விரிவாக சித்தரிக்கப்பட்ட மாதிரிகளை க் கொண்டிருந்தது. அனைத்தும் பொறியியல் சார்ந்த மாதிரிகள், எனவே பொறியாளனாக இருந்தால் உடன் பிறப்புகளை அழைத்து செல்லாதீர். வினா கேட்டு வீண் வசம்புப் பேசுவர். மேலும் வெவ்வேறு விதமாகப் படகுகளின், கப்பல்களின் மாதிரிகளை அருமையாக சித்தரிக்கப்பட்டிருந்தது மிகவும் பழமையான கப்பல்கள் முதல்டைட்டானிக் கப்பல் வரை மாதிரிகள் அமைக்கப்பட்டிருந்தது.
அடுத்ததாக வெண்ணை உருண்டை என்று ஒரு கல்லை காண்பித்தனர். சற்று பலமாக தள்ளினால் உருண்டுவிடுவது போல இருந்தது. பல நூற்றாண்டுகளாக நகராது நிற்க்கும்அளவுக்கு நம் முன்னோர்கள் புவியியல் வித்தகர்களாவர். அதன் கல் அளவுக்கு வெண்ணைஉருண்டை அங்கே வைத்தாலும் நொடியில் உருகி நெய் ஆகும் அளவுக்குச் சூரிய பகவான்ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார் அப்போது. எனினும் என் கண்களும் நெஞ்சமும்எந்த விதச் சோர்வுமின்றி ஆர்வத்துடன் அலைபாய்ந்து கொண்டிருந்தது.
அர்ஜுனன் தபஸ் , பகிரதன் தவம் , இந்த இரண்டு நிகழ்வுகளையும் இரட்டை பிறவிகள்போல வீற்றிருந்து பாறைகளை காண நடைபோட்டோம். சாலைகளின் ஓரத்தில் உள்ளவீட்டில் இன்னும் சிற்பங்கள் செய்வதை கண்டேன். நான் அந்த கலை அழிந்து விட்டது என்றுஎண்ணினேன், ஆனால் அங்கே ஒரு நாள் சென்ற எனக்கே சிற்பக்கலை கற்கும் ஆசைத்தோன்றும் போது, பிறந்தது முதல் அங்கேயே வாழும் அவர்கள் அதை அறியாமல் இருந்தால்தான் விசித்திரம். அர்ஜுனன் ஈஸ்வரனிடம் அஸ்திரம் வேண்டி தவம் புரிந்ததையும், பகிரதன்கங்கையை பூமிக்கு வர வேண்டி தவம் இருந்ததையும் தத்ரூபமாக செதுக்க பட்டுள்ளது.ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இப்படி இருக்கும் சிற்பங்களை, ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசைத் தோன்றியது.
அடுத்து ஐந்து ரதங்கள் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த இடத்துக்கு சென்றோம்.ஒவ்வொரு ரதமும் ஒரே கல்லில் செதுக்கப்பட்டதே அதன் சிறப்பு. புகைப்படம் எடுத்தால்ஆயுள் குறையும் என்பார்கள், அது உண்மையாயின் இந்தச் சிற்பங்களின் ஆயுள் என்றோமுடிந்திருக்க வேண்டும். பாறைகளின் வசம் இருக்கும் அழகை காட்டிலும் நம் மக்கள்அதிகமாகக் கவனம் செலுத்துவது புகைப்படங்கள். அங்கிருக்கும் யானையின் படம்அனைவரின் வீட்டிலும் நிச்சயமாக இருக்கும்.
இறுதியாக இந்த ஸ்தலத்தின் முக்கியமான மற்றும் பிரமாண்டமான ஒரு இடம்,கடற்கரை கோவில். நாம் செய்த பாக்கியம் தான் இன்னும் இந்த கோவிலை கடல் மாதாஆசை கொண்டு எடுத்து கொள்ளாமல் இருக்கிறாள். சற்று தூரத்தில் இருந்துப் பார்த்தால்முக்கோணங்களை சேர்த்ததுப் போல ஒரு காட்சி தோன்றும். அதை சுற்றிக் கடல் அமைந்து,கண்களை நகற்ற இயலாத அளவுக்கு அழகை அள்ளி அளித்தது.
நாம் உன்னதமான கலை ஞானிகளின் கால் தடம் படிந்த மண் மீது நடக்கிறோம். பல நூறுசிற்பிகளின் குருதிச் சிந்திச் செழிப்படைந்த இடத்தில் ஒரு சதவீதம் கூட அவர்களுக்குஇணை இல்லாத நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறோம். சூரியன் அழ்கடலில் மறைந்தபிறகும் ஒயிந்துப் போன உடலைக் கடல் மண்ணில் இளைப்பார செய்து விட்டு, அன்னையின்மடியில் தலை சாய, விரிந்துக் கிடக்கும் வானத்தில் எதையோத் தேடத் தொடங்கியது என்கண்கள். என் கவிதைகளையும் என்னையும் அறிந்தவர்களுக்கு நிச்சயமாக நான் எதைத்தேடுகிறேன் என்று உணர்ந்திருப்பீர். ஆம், என்றும் எனக்கு அமைதியைத் தரும் என்வெண்ணிலாவைத் தேடினேன். தேடல் தொடரும்..



Comments
Post a Comment