ஆண்டு புதிது
மாற்றங்கள் என்றும் மாறாதது. புத்தாண்டு, என்றும் புது புது மாற்றங்களைத் தருவது. இதைக் கொண்டாடும் முறையும் மாறிக்கொண்டே வருகிறது. சிறிது நாம் பின்னோக்கி பிராயணம் செய்வோம். என் புத்தாண்டு கொண்டாட்டங்கள் எவ்வாறு மாறுபட்டுள்ளது என்பதைக் கூறுகிறேன். அனைவர் வாழ்க்கையிலும் இவ்வாறு மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.
பதினைந்து ஆண்டுகள் முன்னர் 2000 ஆம் புத்தாண்டு தின முன்னாள் இரவு, அதாவது 31/12/1999அன்று, எனக்கு ஆறு வயது இருக்கும். அப்போது நான் மட்டுமே என் வீட்டில் குழந்தை. அக்கம் பக்கத்திலும் என் வயதுக்கு சமமான பிள்ளைகள் எவரும் இல்லை. ஆனால் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள பருவ மங்கைகள் அனைவரும் எங்கள் வீட்டில் கூடி என் அன்னையுடன் அரட்டை அடித்து கொண்டு இருப்பார்கள். ‘இன்னிக்கு எல்லாரும் 12 மணி வர முழிச்சிட்டு இருக்கணும் ‘ என்ற வரி அனைவரின் நாவிலும் வந்து செல்லும். ஒரு விதமானப் பூரிப்பு மனதுக்குள் தங்கி இருக்கும். என்னைத் தூங்கச் சொல்லி அனைவரும் அறிவுறுத்துவர். அதற்க்குக் காரணம், அக்கறையா? அல்லது அவர்கள் உரையாடலை நான் அறிய வேண்டாம் என்பதற்கா? என்பதை இந்நாள் வரை நான் அறிந்ததில்லை.
அன்றைய நாட்களில் தொலைக்காட்சி நிகழ்சிகள் மிகவும் குறைவாகவே இருக்கும். அந்நாள் இரவு mummies திரைப்படம் ஏதோ ஒரு சேனலில் ஒலிபரப்பு செய்யபட்டது. அதை பார்ப்பதற்கு அனைவரும் கூடினர். மணி பன்னிரண்டு ஆனவுடன் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தனர். வானத்தில் சென்று பூ போல் வெடிக்கும் ராக்கெட் பார்ப்பது எனக்கு எல்லையற்ற ஆனந்தத்தைத்தரும். அதைப் போன்று ஒரே ஒரு ராக்கெட் வாங்கி, அதை வெடிப்பதை வேடிக்கை பார்க்க அந்த வீதி முழுவதும் இருக்கும் இளைஞர்கள் வருவார்கள். என்னுடன் விளையாட ஆட்கள் இல்லாத காரணத்தால் நான் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். என் பாட்டி என்னை மட்டும் அழைத்து உறங்கச்சொல்லி பக்கத்தில் படுத்துக்கொள்வார். அன்னையும் தோழிகளும் பேசிக்கொண்டே இருப்பர். எனக்கு அவர்களுடன் இருக்க ஆசை. எனினும் பாட்டி, மறைந்த தாத்தா இருந்தபோது புத்தாண்டு எவ்வாறு இருந்தது என்று கதைகள் கூறி என்னை நித்திரையில் ஆழ்த்திடுவார்.
பத்து ஆண்டுகள் முன்னர் என்ன செய்தோம் என்று யோசித்தால். அன்னையின் தோழிகள் மணமுடித்து அவரவர் இல்லத்துக்கு சென்றிருந்தனர். வயதில் என்னை விட சிறியவர்கள் வீட்டில் இருந்தார்கள். அன்னை, அத்தை, பாட்டி என அனைவரும் இணைந்து குலாப் ஜாமுன் மற்றும் பலகாரங்கள் செய்வர். வெறும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்சிகளையே கண் கொட்டாமல் பார்த்திருப்போம். மணி பன்னிரண்டு அடித்தவுடன், landlineல் அழைப்புகள் செய்ய ஆரம்பிப்போம். ஒரே ஒரு அலைபேசி இருக்கும், அதிலிருந்தும் அழைப்புகள் செய்ய விரைவோம். எனினும் எதிர் முனையில் இருப்பவரும் இதையே செய்வதால் இருவருக்கும் இணைப்பு கிடைக்காமல் திண்டாடுவர். பல முயற்சிகள் பிறகு இணைப்புக் கிடைக்கும். நீண்ட நாட்கள் பிறகு அன்புடையவர்களின் குரலைக் கேட்கும் ஆனந்தம் கிட்டும். பலகாரங்களை பகிர நண்பர்கள் உறவினர்கள் இல்லத்திற்கு செல்வோம்.
அவ்வப்போது உள்ள புத்தாண்டு கொண்டாட்டம் பொறுத்தவரை,12 மணி வரை விழித்திருப்பது ஒரு பெரிய செயலாக யாரும் கருதுவதில்லை. காரணம், நாம் தினமும் வேலை முடித்து தூங்கவே குறைந்தது 12 மணி ஆகிறது. ஒவ்வொரு வீட்டிலும் உள்ள நபர்களுக்கு இணையாக அலைபேசிகள் இருந்தாலும் எவரும் எவருக்கும் அலைபேசியில் அழைப்பதில்லை.ஏனெனில் சமுக வலைத்தளங்கள் நம் நிலைகளை மாற்றியுள்ளது. இன்றைய நாட்களில் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு அவசியமாக இருக்கிறது. எவரும் சுற்றத்தினர் இல்லத்திற்கு செல்வதில்லை. செல்வதற்கு காரணங்களையும் நாம் உருவாக்கிக் கொள்வதில்லை. அனைவரும் இல்லத்தில் கூடினாலும், அவர்கள் ஒருவரோடு ஒருவரின் உரையாடல் மிகவும் குறைவாகவே உள்ளது. ஏனென்றால் வாட்ஸ் அப் குரூப்-ல் உரையாடவே விழைகிறார்கள்.முந்தைய நாட்களில் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால், ‘ இன்னிக்கு என்ன ஸ்வீட் செஞ்சிங்க?’ என்ற கேள்வி மறைந்து, ‘உங்க வீட்டு wifi password என்ன?’ என்று கேட்கிறார்கள்.
மனிதன் அன்றும் இன்பமுடன் இருந்தான், இன்றும் இன்பமுடன் இருக்கிறான். ஆனால் சற்று சிந்தித்து பார்த்தால், பதினைந்து வருடத்துக்கு முன்பு சின்ன சின்ன விசயங்களில் நாம் அடைந்த மகிழ்ச்சியை இன்றைய காலத்தில் இழந்திருக்கிறோம். நீங்களும் உங்கள் புத்தாண்டுக்கொண்டாட்டத்தில் நிகழ்ந்த மாற்றங்களைச் சற்றுச் சிந்தியுங்கள். நினைவுகள் நித்தமும் மகிழ்வையும், மாற்றத்தையும் தருபவை.

Comments
Post a Comment