அந்த மூன்று நாட்கள்!
கலை நிகழ்ச்சிகள்! இந்த சொல்லைக் கேட்கும் பெரும்பாலோனோர் தங்கள் கல்லூரிக் காலத்துக்குச் சென்று வருவர். கலை நிகழ்ச்சிகளைப் பொருத்தமட்டில் கால முன்னேற்றத்திற்கு ஏற்ப மாறி வருவதே வழக்கம். என் கல்லூரியில் ஆண்டு தோறும் நடக்கும் INSTINCTS கலை விழா இரண்டு நாள் முன்னரே முடிந்தது. இது முழுதும் மாணவர்களால் நடத்தப்படும் ஒரு பிரம்மாண்டமான விழா. மூன்று நாள் நடைபெறும் விழா ஒவ்வொரு SSN மாணவனுக்கும் இணையில்லாத ஆனந்தத்தை அளிக்கும் விழா.ஒருங்கிணைத்த மாணவர்களும், அதை கண்டு களித்த மாணவர்களும் இன்பத்தின் எல்லையை அடைவர்.என் கல்லூரி வாழ்கையின் கடைசி நிகழ்ச்சி இது.
நான் முதலாம் ஆண்டில் படிக்கும் பொது நிகழ்ந்த நிகழ்ச்சியில் ஒரு சாதாரண ஆர்வ ஊழியராக (volunteer) பணியாற்றினேன். இன்று நான்காம் ஆண்டில் ஒரு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினேன். அன்றும் இன்றும் நான் அறிந்த ஒரு விஷயம் இது. ஆடலோ, பாடலோ, அது மகிழ்விப்பதாக இருந்தாலும், மொக்கையாக இருந்தாலும், நாம் அதை எடுத்துக்கொள்ளும் விதமே நமக்கு இன்பம் பயக்கும். நாம் அனைத்தையும் மாற்றி சுவாரசியத்தை கொண்டு வரும் ரகசியத்தை அறிந்தவர்கள். நல்ல நண்பர்களும், சந்தோஷத்தை உருவாக்க என்னும் மனதும் இருந்தால் ருசியில்லாத உணவில் கூட அறுசுவை உணரலாம்.
எதற்காக இதையெல்லாம் கூறுகிறேன் என்ற கேள்வி உங்கள் மனதில் நிச்சயமாக எழும். கேள்விகள் என்றும் வெவ்வேறு பதில்களை உருவாக்கும். சரி நாம் விசயத்துக்கு வருவோம். இந்த முறை கலைவிழாவை நடத்த மிகுந்த முயற்ச்சி எடுக்க வேண்டியது இருந்தது. சென்னை வெள்ளத்தின் காரணமாக பண நெருக்கடி வந்தது. சிறிது சிறிதாக அனைத்து இடர்களிலிருந்து வெளிவந்து INSTINCTS வெற்றிகரமாக நடந்தது. எனினும் என் மனதில் தோன்றியதை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
சில SSN மாணவர்களே INSTINCTS க்கு வரவில்லை என்பது அனைவரும் அறிந்த உண்மை. இறுதியாண்டு மாணவர்களும் இதில் பெரும் பங்கு வகிப்பர். முக்கியமாக இறுதியாண்டு மாணவர்களுக்கு கூறுகிறேன். விழா நமக்காக நடத்தப்பட்டது. அனைவரும் இனிதே மகிழ்ந்து வந்து இதை நிறைவு செய்திருந்தால் பணியாற்றியவர்களின் மனதில் பேரின்பம் பெருகி இருக்கும். பாடுபட்டு நடத்தியது என்பதால், அனைவரின் பங்களிப்பை எதிர்பார்த்தனர். எனினும் நாம் மற்றவர்களின் மகிழ்ச்சியை காண்பவர்கள் அல்லவே. அதனால் இதையும் எதிர்பார்க்க முடியாது.
இனி எவரும் உங்களுக்காக கலை விழா நடத்த போவதில்லை. உங்களுக்கு இந்த விழா மிகவும் சாதரணமாக இருக்கலாம். இதில் அனுபவிக்கும் மகிழ்ச்சியை விட நூறு மடங்கு மகிழ்ச்சி வேறு விதத்தில் பெறலாம். ஆனால் ஒரு நாள் வாழ்க்கையில் உணர்வீர்கள், நம் கல்லூரி வாழ்க்கை மீண்டும் வேண்டும். இவ்வாறு விழாக்கள் வேண்டும் என்று. இறுதியாண்டில் ஏற்படும் இன்னல்களால் நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்கலாம். இனி ஒரு செயல் செய்யும் முன்பு சற்று யோசியுங்கள். காலம் அலைகளை போல, ஒரு முறை வருவது மீண்டும் நம்மை அடையாது. உங்கள் பாதச்சுவடுகள் அதில் மிகவும் முக்கியம். அலைகளால் சுவடுகள் மறைந்தாலும் ஆழ்கடலில் சுவடுகள் மூழ்கி இருக்கும். ஆழ்மனதில் உறைந்து விளங்கும் நினைவுகளைப் போல.
அந்த மூன்று நாட்கள், ஒவ்வொரு வருடமும் எனக்கு வெவ்வேறு அனுபவத்தை தந்தது. அனுபவமே என்னை செதுக்கியது. இனி அந்த மூன்று நாட்கள் வாழ்க்கையில் தோன்றாது எனினும், அதைக் காட்டிலும் அனுபவம் தரும் நாட்கள் வரும் என்ற நம்பிக்கையில் வாழ்க்கைப்பயணத்தை தொடர்கிறேன்.
Comments
Post a Comment