சித்தரிப்பின் சித்தாந்தம்

ஆகஸ்ட் 14, 2016
     ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னி பிணைந்து மனிதனின் வாழ்வை ஆட்டிப்படைப்பதே இயற்கையின் அமைப்பாக சித்தரிக்கப் பட்டுள்ளது. சித்தரிப்பின் சித்தரவதையில் சிக்கி தவிப்பதும், அதே சித்தரிப்பின் சிரிப்பில் சிலாகித்து மகிழ்வதும், மனிதனின் இயல்பு. இந்த நாளில் நான் இரு உணர்வுகளையும் ஒன்று போல் உணர்ந்து சிக்கி தவித்தேன் ஆனந்தத்திலும், அழுகையிலும்.
    சிறிது நாட்களில் முதுகலை பட்டப்படிப்புக்காக நான் அயல் நாட்டுக்கு செல்ல இருப்பதால் என் பள்ளி பருவ நண்பர்கள் அனைவரும் இன்று சந்திப்பதாக திட்டமிட்டிருந்தோம். காலை 10 மணியளவில் அனைவரும் தொழி இல்லத்தில் ஒவ்வொருவராக ஒன்று சேர தொடங்கினோம். எதிர்பார்ப்பு இல்லாத, குறைகளை சுட்டி காட்டாத நட்பு மதிப்பிட முடியாதது. எழுவரும் ஆறு வருடத்துக்கு மேல் ஆருயிர் தோழிகளாக உள்ளோம். என் பயணம் இனிமையும் வெற்றியும் அடைய வாழ்த்துக்களும், பரிசுகளுடன் இன்றைய தினம் எல்லையற்ற பூரிப்புடன் நகர்ந்துக் கொண்டிருந்த வேளையில், கொடுங்கனவு கூட தராத அதிர்ச்சியை தந்தது அந்த தொலைக்காட்சி பெட்டி. திரு. நா. முத்துக்குமாரின் மறைவு.

     ஆறு மாதம் முழுதாய் முடியவில்லை இவரை நான் சந்தித்து. சாரலின் தொடக்க விழாவுக்கு வந்த இவரது வார்த்தைகள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டிருகிறது. தமிழை விரும்புபவர்கள் எவரும் இவரை வெறுத்ததாக நான் கேள்வியுற்றதில்லை. கண்களில் முட்டி நிற்க்கும் கண்ணீரை அடக்கி கொண்டு, அந்த இடத்தை விட்டு நகர்ந்து மனதை திசை திருப்பி மூன்று மணி நேரம் சென்றது. என் துக்கம் என்னுடன் இருப்பவர்களை பாதிக்கும் என்று எண்ணி என் உணர்ச்சிகளை அடக்கி கொண்டேன். எல்லை இல்லாத ஆனந்தத்தை அந்த அறுவர் என் பாதச்சுவடுகளின் பதிந்திருக்கும் ரேகைகள். என்றும் மனதால் பிரியாத இவர்களிடம் பிரியா விடை பெற்று இல்லம் அடைந்தேன்.
     அன்னையிடம் நண்பர்கள் அளித்த ஆச்சரியங்களையும், மறைவு தந்த அதிர்ச்சியையும் பற்றி விரைந்து வார்த்தைகளை கொட்டினேன். தொலைகாட்சியில் அவரது இறுதி அஞ்சலி காட்சிகளை கண்டு கண்ணீர் மல்க நினைவுகளில் கரைந்துக் கொண்டிருந்தேன். நெடு நாள் வாழ்ந்திருந்தால் பலருடைய சாதனைகளை சாதரணமாக மாற்ற நேரிடும் என்ற காரணத்தினால் மறைந்துவிட்டார் போலும். மறைவிலும் அவரது எளிமையை வெளிபடுத்தி துக்கத்தில் ஆழ்த்துகிறார்.
‘காலங்கள் ஓடும், இது கதையாகி போகும், உன் கண்ணீர் துளியின் ஈரம் வாழும்’ என்று எழுதி, இன்று நம் கண்ணீரில் துளிகளில் அவர் குடிக் கொண்டார்.

     நீண்ட நாளாக நான் வலைபதிவு ஏதும் செய்யவில்லை, காரணம் தெரியவில்லை. இன்பமும் துக்கமும் ஒரு சேர நிகழ்ந்த இந்த நாளை ஒரு நாளும் என்னால் மறக்க இயலாது. சித்தரிப்பின் சித்தாந்தம் சிக்கல் மிகுந்தது. இதை ஒவ்வொரு நாளும் கடந்து செல்லும் போது நாம் அடையும் உணர்ச்சிகள் தரும் அனுபவங்கள் பொக்கிஷம் போன்றவை. செதுக்கி விடுங்கள் நீங்கள் அனுபவித்த சித்தரிப்பை.

Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்