டாலர் தத்துவங்கள்!
“என்ன அக்ஷு? ஒரே
செமையா என்ஜாய் பண்ற போல? US லைப் வேற, ம்ம் கலக்கல் தான் போ!!”
என்னுடன் பேசும் அனைவரும் இந்த சொற்றொடரை,
பெரும்பாலும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். இது என் விஷயத்தில் மட்டுமல்ல.
பொதுவாகவே அமேரிக்கா வில் இருந்தால் எந்நேரமும் சந்தோஷம்,
கொண்டாட்டம், பேரின்பம் என்ற நினைப்பு அனைவர் மனத்திலும் நிலவி வருகிறது.
ஆம்! பேரின்பம் தான். முதல் அழுகையின் ஒலியை
பிறப்பிடத்தில் பெருக்கிய காற்றை இழந்த இன்பம். குறையை சுட்டிக் காட்டி நற்பண்புகளை
ஊக்குவித்த பெற்றோரின் வார்த்தைகளை தனியே விட்டு வந்த இன்பம். திடமாக போராட கற்பித்த
உடன்பிறப்புகளிடம் முறையற்று உண்டான வாக்குவாதங்களை உதறி விட்டு வந்த இன்பம். நிலா
சோற்றில் பாசத்தை ஊட்டினாலும் பாட்டி விதித்த கட்டுபாடுகளை மீறி வந்த இன்பம். ஆருயிர் நண்பர்களின்
பந்தத்தை வலுப்படுத்திய கருத்து வேறுபாடுகளை அனாதையாக விட்டு வந்த இன்பம்.
அயல்
நாடு வருபவர்களில் தொண்ணுறு சதவிதம் இதை உணர்ந்திருப்பார்கள். இன்பமென்று கூறும்
வலி என்று. தாய் நாட்டில் சந்தித்த மகிழ்ச்சிகள் இங்கு எந்த வித மகிழ்ச்சிகளோடும்
ஒப்பிட முடியாது. சிப்பிக்குள் இருக்கும் முத்து பாதுகாப்புடன், சுகமாக இருந்திருக்கும்.
அதே முத்து மனிதன் கைகளில் வரும் போது, மதிப்பு பன் மடங்கானாலும், அதை மெருகேற்றி
சித்தரவதை செய்து ஆபரணங்களாய் மாற்றப்படுபவன. இது தான் எங்கள் நிலைமை.
வாழ்க்கையின் நிலை முன்னேறினாலும், சொந்த ஊரில் கிடைக்கும் சுகம் வேறு.
மெய்யாக கூற வேண்டுமானால், இங்கிருக்கும்
அனைவரும் எதானால் இங்கு இருக்கிறார்கள் என்று அவர்களுக்கு புரியவில்லை. தங்களுக்கு
ஏற்றார் போல ஒவ்வொரு சமாதான காரணங்களை மனதுக்குள் புகுத்திக் கொண்டு
வாழ்கின்றார்கள்.

தகப்பனின் உடல் சுவாதீனம் இழந்து படுக்கையில்
கிடக்கையில் பணிவிடை செய்ய இயலாத பெண்கள் நாங்கள். தாயின் இறுதி மூச்சு பிரியும் போது
கைகளை பிடிக்க இயலாத தனையன்மார்கள் நாங்கள். புது பெண்டாட்டியின் மீது கொண்ட மோகத்தை
இயற்கையில் காணும் கணவன்மார்கள் நாங்கள். மழலை செல்வங்களின் முதல் பேச்சை கேட்க இயலாது
தவிக்கும் கடல் கடந்து பணியாற்றும் அப்பாக்கள் நாங்கள். குழந்தைகளிடம் நம்
கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், மொழியையும் வரலாறு பாடம் போல சொல்லிக்
கொடுக்கும் ஆசிரியர்கள் நாங்கள். ஆறு மாதம் வரும் பாட்டி, தாத்தாவின்
பாசத்தை எண்ணி தினம் தினம் ஏங்கும் பேரன், பேத்திகள் நாங்கள். காதலியின் புகைப்படம்
கொண்டு நிஜத்தில் கனவுகளால் சுவாசிக்கும் காதலன்கள் நாங்கள். காதலனின் அக்கறை
பேச்சை காற்றில் கேட்டு இயங்கும் காதலிகள் நாங்கள். துன்பங்களை மறக்கடிக்கும்
நண்பர்களின் பேச்சை நகைச்சுவை திரைப்படங்கள் கொண்டு ஆறுதல் கொள்ளும் மக்கள்
நாங்கள். அண்ணனின் கிண்டல்களை தொலைத்து தினம் தினம் தேடும் தங்கைகள் நாங்கள்.
தங்கைகளின் வம்புகளை நினைத்து நித்தமும் மருகும் அண்ணன்கள் நாங்கள்.
இனி அயல்நாடுகளில் வாழ்பவர்கள் சந்தோசமாக
இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பணமும், புகழும் தராத
இன்பங்களின் அருமை உண்டு. அதில் சிலவற்றை பறிக்கொடுத்து வாழும் நாடோடிகளை உங்களில்
ஒருவன் என நினையுங்கள். கனவுகளை வளர்த்த ஒரு உறவின் தவிப்பை உடன் இருந்து பார்த்துக்
கொள்ள முடியாத ஒரு துர்பாக்கியசாலியின் உரையை வாசித்ததுக்கு நன்றி!!
Comments
Post a Comment