ஹொபோகென், அக்டோபர் 27 2017
இலையுதிர் வண்ணத்தை தூவ சோர்வுற்று இளைப்பாறுகையில்,
வளிய உதவ எண்ணி வாடை காற்று வண்ணங்களை இலைகளுக்கு பரப்பிக் கொண்டிருக்கிறது.
ஆர்வக்கோளாறினால் சற்று வானத்துக்கும் தெளித்து விட்டது வாடை காற்று. கடலை சேரும் ஆரவாரம் அளவில்லாமல் இருப்பினும்
இரு புற நகர்களின் அழகை மெருகேற்றும் பொறுப்பு கருதி, பொங்கி வரும் தன் ஒய்யார நடையை,
வெட்கத்தோடு கட்டுபடுத்தி, ஜெர்சியை ஒரு புறமும் , நியூயார்கை மறு புறமும் தழுவிக்
கொண்டிருக்கும் ஹட்சன் நதி. எதிர் கரையின் வலப்புறம் வானை கிழிக்க நிற்கும் WTC
(உலக வர்த்தக மையம்) மற்றும் அதன் உற்றார் உறவினர் போல சின்னஞ்சிறு (WTC உடன் ஒப்பிடுகையில்) கட்டிடங்கள். கிழித்த
வானத்தை தங்குவோம் என, இடப்புறம் நமது Empire State கட்டிடம் அதன் உற்றார் உறவினரோடு காத்துக்
கொண்டிருக்கிறது. அரை மதியின் வெளிச்சமும், ஒரு நொடிக்கு முன் எரிய
ஆரம்பித்த விளக்கு கம்ப ஒளியும் போட்டியிட்டு என் நாட்குறிப்பின் எழுத்துக்களில்
ஊர்ந்து கொண்டிருக்கிறது.
பத்து நிமிடத்தில் நானும் போட்டிக்கு வருகிறேன் என்பது
போல நியூயார்க் நகர ஒளி, மதியை மிஞ்சும் அளவு அழகை அள்ளி வீச தயாராகிக் கொண்டிருக்கிறது
என் எதிரில். என்னை சுற்றி அறைவட்டதுக்கு தண்ணீர் மட்டுமே என் பார்வையில்
தென்பட்டது. ‘இதுவும் கடந்து போக வேண்டும்....’ என்ற வரிகளுடன் பாடல் என் ஹெட்
போனில் இசைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்து தான் போக வேண்டும். மனிதனாக பிறந்தவர்கள்
அனைத்தையுமே கடந்து தான் போக வேண்டும். சென்ற வருடம் இதே மாதத்தில் முதன் முதலில் இங்கு
வந்தேன். அன்றும் நினைக்கவில்லை. தனிமையை ஒரு நாள் விரும்பி இங்கு வந்து எழுதுகோளை
பிடிப்பேன் என்று. அந்நாளில் தனிமை என்பது நான் விரும்பாத ஒன்று. வாழ்க்கையின்
விந்தையே நாம் வெறுத்தவற்றை விரும்ப வைப்பதே. இந்த நிலையில்லாத வாழ்க்கையில்
தத்தளிக்கும் வாத்துக்கள் நாம்.
சிறிது நேரம் முன்னர் நான் நதிக்கரையின் அழகை
ரசித்துக் கொண்டு நடந்து வருகையில், என் நடைக்கு இணையாக நதியில் இரண்டு
வாத்துக்கள் எனக்கு துணையாக நிந்திக்கொண்டிருந்தது. அதில் ஒரு வாத்துக்கு கரும்
பச்சை சற்று அதிகமாக இருந்ததால் அது வாத்து என்று தனிப்பட்டு தெரிந்தது.
இல்லையெனில் அது கண்ணுக்கு தென்படுவதே மிகவும் அரிது. அந்த கரும் பச்சை கழுத்தை
தொடர்ந்து காக்கி வண்ண வாத்து சென்றுக் கொண்டிருந்தது. கரும் பச்சை நிந்துவதில்
நிபுணர் போல, வெடுக்கென்று பொங்கி வரும் நம் ஹட்சனின் ஆரவாரத்திலும் சமநிலை வகித்தது.
காக்கி வண்ணம் என்னை போல சற்று தடு மாறிக்கொண்டிருந்தது. வாழ்க்கையெனும் ஹட்சன்
நதியில் நீந்த பழகும் வாத்துக்கள் நாம். சிலர் முளையிலையே கரும் பச்சை ஆகிறார்கள்,
பலர் காக்கி ஆக இருந்து அனுபவ படுகிறார்கள். என் பார்வையில் காக்கியே இதில் அதிக அனுகூலம்
பெற்றது. அதற்கே அனுபவம் அதிகம். எனவே உண்மையில் அது தான் நிபுணன்.
நாம் சந்தித்த மனிதர்கள், சுழ்நிலைகள் நம்மை
முற்றிலும் மாற்றம் உண்டாக்குவன. நான் இன்று வாழும் வாழ்க்கை, என் கனவிலும் நான்
எதிர்பாராத ஒன்று. குடும்பத்தை பிரிந்து, எந்த துணையையும், எவரையும், எதற்கும்
எதிர்பார்க்காமல், முக்கியமாக அதிகமாக பேசாமல், என்னை நானே மகிழ்வித்துக்
கொண்டிருக்கிறேன். எனக்கென தொலை துரத்தில் இருக்கும் என் நெருங்கிய வட்ட சகாக்கள், அவ்வப்போது
இரண்டாம் வீடாக திகழும் என் உடன்பிறவா தமக்கையின் இல்லம், இவையெல்லாம் என்னை முழுமை அடையச்
செய்து, இன்று இந்த உரையை எழுத உதவியுள்ளது. ஒரு வருட காலம் காக்கியை போல நான்
தள்ளாடி, இன்று கரும் பச்சையை போல ஒய்யாரமாக ஹட்சன் நதிக்கரையில் என் எண்ணங்களை சமநிலை
படுத்தி எழுதிக்கொண்டிருக்கிறேன்.
கண்கள் கூசும் அளவு என் முன்னால் நியூயார்க்
ஒளிர ஆரம்ப்பித்து விட்டது. படர்ந்து வரும் குளிரினால் கைகளும் நடுங்க ஆரம்பித்து
விட்டது. அருகில் கல்லை நதியில் வீசும் போட்டியை தங்களுக்குள் வைத்து விளையாடிக்
கொண்டிருக்கும் மகனும் அம்மாவும் சோர்வடையவில்லை. ஒரு கையில் கைத்தடியும் மறுக்
கையில் கணவனை பற்றிய அறுபது வயது மூதாட்டியின் நடை தளரவில்லை. குறிப்பிட்ட
நேரத்தில் தனது டேட் பார்ட்னரை காணவில்லை எனினும்
அந்த இள மகனின் கண்களில் சலிப்பு இல்லை. காப்பி குடுவையுடன் தன் செல்ல பிராணியுடன்
அளவளாவ வந்த ஆண்மகன் கட்டுப்பாட்டை விடவில்லை. நான் மட்டும் ஏன் இந்த குளிருக்காக நிறுத்த
வேண்டும்?
குளிர் என்றும் இருப்பது தான். ஆனால் நான்
எழுத்தை நிறுத்த வேண்டுமா?

Superb da
ReplyDeleteThank you!
DeleteVery Nice dear :)
ReplyDeleteThanks a lot mama
Delete