காதல் கலாபம்


காந்தர தேசத்து இளவரசியுடன்
    போட்டியிடும் கண்ணியம்!
பாரதியின் புதுமைப் பெண்ணிடம்,
       பவனிவரும் பெண்ணியம்!
கண்ணகியின் அடக்கம் தழுவி
       பொங்கிவரும் நியாயம்!
ஒருசேர வந்தவளோடு காதல் கொள்ள,
மதம் கொண்ட மதங்களை மதிக்க,
காதலை எரித்து உயிரற்ற உடலாக அவன்!

நறுமுகை பூக்கையில், மேலெழும் புருவங்கள்!
ஆப்பிலின் சாயலில், சிவக்கின்ற கன்னங்கள்!
நீர் வீழ்ச்சிகளுக்கு போட்டியாக, பாய்கின்ற குழல்கள்!
நெல்லையின் பிள்ளை நித்தம் இதை பாட,
இரு வீட்டார் சம்மதம் மொழிய,
நங்கை ஏந்த தவங்கிடக்கும் அவன்!

வெட்கம் கண்ணாமூச்சி ஆட,
வெடுக்கென்று விதைத்த முத்தங்கள்!
வம்பு சண்டைகளில் அழ,
திடீரென்று உதயமான அணைப்புகள்!
தவம் புரிந்து கிட்டிய,
தனிமையில் தீண்டிய உணர்ச்சிகள்!
இதில் கொண்டது காமம் என்றெண்ணி
முற்றிலும் உருவான கருவாகிய காதலை  ,
கருச்சிதைவு செய்து விக்கி விக்கி அழுகும் அவள்! 


மங்கைகள் மயங்கும், மாய குறுஞ்சிரிப்பு!
கரிசக்காடு மறைத்து, பொக்கிஷமான கன்னக்குழி!
டான் பிரவுன் எழுத்துகளால், உதயமான கருத்துச்செறிவு!
யாவன கவர்ந்த காரிகையாளை – சதா
இன்புற்றி இளைப்பாற இல்லறம் இழைத்து,
நல்லறம் நாட அவனுக்காக காத்திருக்கும் அவள்!


இலையுதிரின் சிவப்பில்,
               எழிலோவியமான இதழ்கள்!
வெண்தாமரையின் நகலாக,
                விதைக்கப்பட்ட கண்கள்!
தென்றலின் தீண்டுதலில்,
              நாட்டியமாடும் ஜிமிக்கிகள்!
இதில் உருகுவது அவனாயினும் - நிதர்சனத்தில்
தொப்புள் கொடி உறவின் உணர்ச்சிகளில்,
காதலை தொடரவா? முறிக்கவா? திண்டாடும்  அவன்!

பாலிய பொழுதின், சிநேக அலைகள்!
பருவ காலத்து, காதல் பறவைகள்!
அக்ஷய பாத்திர பாசம், ஆழி பேரலை கோபம்!
இருவரும் இணைந்து பிரிவது கொடியது,
அறிந்து பிரிவை பிரியமுடன் சுகித்தான்.
பிரிவின் வலியில் புன்சிரிப்புடன் அவன்!

ஆண் பிள்ளை வாசம்,
      அறியா மலரின் முதல் சுவாசம்!
ஆதியும் அந்தமும்,
     பிரியாது சஞ்சரிக்க ஒப்பந்தமிட்ட பந்தம்!
ஆழ்மனதில் உடுருவி,
      உதிரத்தோடு உறைந்து போன உயிர்!
முதல் காதலே கடை காதல் என்றெண்ணி
உற்றார் சம்மதம் கிட்டிய பின்னர்,
உதறியவனை நினைத்து சித்திரவதையில் அவள்!


டேஸ்டோஸ்டிரோன் மெருகேற்றிய ஆரோக்கிய குரல்!
பாண்டிய வீரத்தின் மருவிய தோரணை!
இளம் பிறையின் குழந்தையான இளிப்பு!
மேற்கண்ட மயக்கங்களில் காதல் வளர,
ஒரு தலை ராகத்தில் இருதலை நட்பு மருவி,

காதலை மிஞ்சிய நட்பாக மகிழ்ச்சியுடன் அவள்!




‘அவன்’ களும் ‘அவள் களும் இடையில்

இன்பமும் துன்பமும் துழாவி துவண்டு,

இருவரின் இதயமும் இளகச் செய்து,

தெளிந்து திகழ்வதும், மருவி மறப்பதும்,

எம் விழியால் நான் காணும் காதலாகும்!



Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்