அழகுகளின் வாடிக்கை!
சக்கரங்கள் நிதானத்தை நாடியது, என்
கால்கள் வேகத்தை நாடியது. விடு விடு வென்று பேருந்தை விட்டு இறங்கி, என் வார இறுதி
விடுமுறையை முன்னிட்டு பார்க் சென்று சற்று இளைப்பாற நடந்தேன். இதுவரை நான் அந்த
பார்க் க்கு சென்றதில்லை. அறியாத இடம் என்பதால் சற்று நிதானமாக கவனித்துக் கொண்டு
நடந்தேன்.
சிறிதளவு சிரமப்பட்டு என் கண்கள் தூரத்தில் தெரிந்த இருவரை
உன்னிப்பாக ரசிக்க ஆரம்பித்தது. கண்களின் சிரமத்தை ஏற்க மனமில்லாமல் என் கால்கள்
அந்த இருவரை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது.
முத்தின் வெண்மையை திருடிய தங்க தேகம் அவள்!
வெள்ளி சங்கிலியாய் மின்னும் தழும்புகளின் தேகம் அவன்!
செழுமை மிக்க கலாச்சாரத்தின் புனிதச் சின்னம் அவள்!
செந்நீர் சிந்திய உயிர்களினிடையே ஓங்கிய கோடி அவன்!
ஆனந்த அருவி சுரக்கும் மடி அவள்!
அமைதி காற்றை பரப்பும் மனது அவன்!
அதிகாரங்களால் மேகங்களை கிழிக்கும் சதுரங்க ராணி அவள்!
நெறிமுறைகளால் விண்ணை வெல்லும் சதுரங்க ராஜா அவன்!
நிலையில்லா அழகும் நிலைப்பெற்றுத் திளைக்கும் அவளிடத்தில்!
அழகினால் நிலைகுலைந்தாலும் கம்பீர ஆண்மை அவனிடத்தில்!
இந்த இருவரும் எனக்கு மிகவும் பழக்கப் பட்டவர்கள். ஒரு
நாளைக்கு ஒருவரையாவது சந்தித்து விடுவேன். இன்று இருவரையும் ஒன்று சேர பார்த்தேன்.
இருவரும் முழு மதியை மயங்கச் செய்து ஈர்த்து விளையாடுவது
வழக்கம்.
இன்று வழக்கத்திற்கு மாறாக என் மதியை மழுங்கச் செய்து,
காதலர்களாக உருமாறி என் நீண்ட நாள் எழுதா தவத்தை கலைத்துவிட்டார்கள் ‘எம்பயர்
ஸ்டேட்’ (Empire State) கட்டிடமும், ‘ப்ரீடம்
டவர்’ (Freedom Towers) கட்டிடமும்.
தவங்களை கலைப்பதே அழகுகளின் வாடிக்கை!

Comments
Post a Comment