தீரா உலா - Ⅲ


கதிரவன் தன் கதிர்களைக் கொண்டு, ஜன்னல் வழியாக, சுமார் இருபத்தைந்து இரட்டை ஜடை மடந்தைகளை ரசித்துக் கொண்டிருந்தான். கதிர்கள் வெப்பத்தைக் கிளப்பி, வியர்வை துளிகளை முத்துக்களாக முகத்தில் உருவாக்கி, பிரகாசித்துக் கொண்டிருந்தன.

சில முத்துக்கள் பருக்களின் இடையில் உடைந்தன. சில முத்துக்கள் வழுவழுப்பான கன்னங்களில் ஸ்கேட்டிங் செய்துக் கொண்டிருந்தது. கதிரவன் மடந்தைகளை பிரகாசிக்கச் செய்ய, அவன் மேல் பொறாமை கொண்ட இளம் மாணவர்கள், ஓரக் கண்ணில் கோபமும், நேர் கண்ணில் சோகமும் கலந்து, வகுப்பு நடத்தும் இயற்பியல் ஆசிரியையின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இரண்டாம் பெஞ்சின் ஓரமாக இருந்த சிறு சாக் பீஸ் துண்டை சாரு எடுத்தாள். அவளின் விரல்களின் வியர்வை மீது அந்த தூள்கள் ஒட்டிக் கொண்டது. சாக்கை கீழே வைத்து விட்டு விரல்களை சேர்த்து துடைத்தாள். அருகில் இருந்த யாழினி அதை பார்த்து புன்முறுவல் உதிர்த்தாள். இருவரும் மொழி இல்லாமல் பேச ஆரம்பித்தனர்.

புருவத்தை தூக்கி ‘என்ன?’ என்று அவள் கண்களில் வினா எழுப்பினாள்.

அவள் புருவத்தை குறுக்கி தலையை அசைத்து ‘ஒன்றுமில்லை’ என்று உணர்த்தினாள்.

அவர்கள் முன் நின்றிருந்த இயற்பியல் ஆசிரியின் மீது கொண்ட வெட்கத்தால், மடந்தைகளின் வார்த்தைகள் தொண்டைக்குள்ளே சிக்கித் தவித்தனர். இரண்டாம் பெஞ்ச் என்பது அவர்களுக்கு சொர்க்கத்தின் வாசல். வகுப்பு ஆரம்பித்து பத்து நிமிடம் தான் ஆசிரியை அங்கே இருப்பாள். மீதி நேரம் முழுவதும் பின் இருக்கும் பென்ச்சுகளுக்கு போய் விடுவாள்.

மெல்ல மெல்ல அவள் கொலுசொலி, பெஞ்ச்சுகளுக்குள் மறைய, வெட்கத்தால் சிக்கித் தவித்த வார்த்தைகள் அனைத்தும் வெளியே வர ஆரம்பித்தன.




ஓரப்பார்வையில் ஆசிரியையை பார்த்தபடி யாழினியை நோக்கி

‘நம்ம ஃபிசிக்ஸ் மிஸ் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல?’ சாரு கேட்டாள்.

‘மே பி, காதல் தோல்வியா இருக்கலாம்’ யாழு சிரித்துக் கொண்டே பதிலளித்தாள்.

‘என்னவோ போ! காதல் தோல்வின்னா, கல்யாணம் பண்ண கூடாதா என்ன? ஆயிரம் இருக்கட்டும். போறவன் போயிட்டு போறான். நம்ம வாழ்க்கைய நாம தான் பாத்துக்கணும். சும்மா காதல் தோல்வின்னு கல்யாணம் பண்ணாம இருக்க முடியுமா? இதுக்கு தான் உன்ன மாதிரி இருக்கணும். பசங்க கிட்டயே பேசாம. வீட்ல பார்ப்பாங்கன்னு’ பட பட வென்று பேசி முடித்தாள் சாரு.

பட படத்தவள் யாரென்று கதிரவனின் கதிர்கள் சற்று நிமிர்ந்து முகத்தை பார்த்தது.

‘அப்படி ஒன்னும் இல்ல. எனக்கு பசங்கள பிடிக்காதுன்னு இல்ல. நல்ல பசங்க பேசனா பேசுவேன். பட் நோ ரிலேஷன்ஷிப்ஸ்’ நமட்டு சிரிப்புடன் யாழு கூறினாள்.

‘உஷ்’ பின் புறம் இருந்து ஆசிரியை சற்று அதட்டினாள். குண்டூசி சத்தம் வெளிவரும் அளவு அமைதி ஆகியது. இரண்டு நிமிடம் கழித்து ஆங்காங்கே சில உரையாடல்கள், ஈசல் சத்தம் போல பரவ ஆரம்பித்தது.

சட்டென நினைந்தது நெஞ்சம், 
           சர்க்கரை ஆனது கண்ணீர்

இன்பம் இன்பம் ஒரு துன்பம், 
               துன்பம் எத்தனை பேரின்பம்’ 

மேல் இதழ் கீழ் இதழுக்கு பாடுவது போல உதட்டுக்குள்ளே பாட ஆரம்பித்தாள் யாழு.

‘என்ன பாட்டு டீ இது? நான் கேட்டதே இல்ல’ ரகசியமாக கேட்டாள் சாரு.

‘உனக்கு இந்த பாட்டு நல்லா தெரியும். நீ கவனிக்கலைன்னு நினைக்கறேன். ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல ப்ரொப்போசல் சீன் ல வருமே’ நினைவுப் படுத்தினாள் யாழு.

‘அட ஆமா. செமையா இருக்குமே! சிம்ரன் கேட்பாளே ‘இது உங்க கதைல வர ஒரு அத்தியாயம் இல்லையேன்னு?’ காட்சிகளை மனதில் காண ஆரம்பித்தாள் சாரு.

மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்சியை காண, சாருவின் கழுத்துச் சங்கிலியின் டாலரும் பின்புறம் திரும்பி, மனதுக்குள் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

யாழு சாருவை நோக்கி பேச ஆரம்பித்தாள்.

‘காதல், தமிழ் போல இருக்கணும். தெளிவா, அழகா, திடமா! சும்மா நச்சுன்னு இருக்கணும்,

நம்ம முதல்ல படிச்ச ‘அ’ எழுத்து எப்படி நம்ம மனசுல அழியாம இருக்கோ,

ப்ளாக் போர்டு மேல நம்ம மிஸ் தமிழ் னு எழுதறப்போ கம்பிரமா இருக்கோ, அப்படி இருக்கணும்.

நம்ம ‘ல’,’ன’ எழுத்துக்கள் மாதிரி, காதலோட சின்ன அசைவுல கூட வித்தியாசம் தெரியனும்......’

‘போதும் போதும் யாழு. விட்டா உயிருடன் கலந்த மெய்யா இருக்கணும் ன்னு சொல்லுவ போல?’ சாரு குறுக்கிட்டாள்.

 ‘அதான் சொல்ல வந்தேன்!’ என்றாள் யாழு.

‘சரியா போச்சு போ! உனக்கு நல்ல தமிழ் ஆசிரியர் கிடைப்பான்’ சாரு கிண்டல் செய்ய ஆரம்பித்தாள்.

தமிழ் என்ற வார்த்தை கேட்ட முன் பெஞ்ச் தமிழரசியின் ரிப்பன், ஆசிரியை கூப்பிடாளோ என்ற பயத்தில் சட்டென நழுவி அவிழ்ந்தது. தமிழரசி திரும்பி பார்த்தாள். அவள் கண்கள் இருவரையும் சந்தேகத்தில் பார்த்தது. இருவரும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டனர். தமிழ் திரும்பியதும், தமிழ் காதலை தொடர்ந்தார்கள், யாழுவும், சாருவும்.

‘அது ஒரு வைப் ன்னு சொல்லலாம். ஒரு பையன பார்த்த வுடனே அவன் முகம் அப்டியே மனசுல பதியனும். அவன் கேரக்டர், கம்பிரமா நம்ம நெஞ்சுல நிக்கணும். அவனோட சின்ன சின்ன உரையாடல் குட பெரிய மாறுதலா பீல் பண்ண வைக்கணும். அப்படி சொல்றேன் மா!

பேச்சுலதான் காதலே இருக்கு. அந்த பேச்சு ரொம்ப தெளிவா, அழகா, திடமா, இருந்தா அவளோதான்’ விரிவுரை கொடுத்தாள் யாழு

 ‘ஒரு மணி நேரம் ஒரு பெர்சன் கிட்ட பேசனாலே, அவன் கூட லைப் லாங் இருக்க முடியுமா ன்னு ஜட்ஜ் பண்ணிரலாம். அப்படித்தானே?’ சாரு வினவினாள்.

யாழு தொடர்ந்தாள் ‘கண்டிப்பா! , இப்போ ஒரு பையன் என்ன ப்ரோபோஸ் பண்றான்னு வை, நானும் பிடிச்சு போய் லவ் பண்றேன்னு வை, அப்பறம்? அவளோதான்!

எங்க அப்பா, அம்மா லவ் மேரேஜ்க்கு ஒத்துக்க மாட்டாங்க. சண்ட போடணும். பிரச்சனை. நான் அப்பா, அம்மாக்காக லவ் கிவ் அப் பண்ணிருவேன். பெயின் ரெண்டு பேருக்கும். எதுக்கு இதெல்லாம்? சொல்லு?’

‘நீ ஏன் கிவ் அப் பண்ற?’ புரியாமல் சாரு கேட்டாள்.

‘அது கஷ்டம். யு நோ வாட், லவ் ன்னா என்ன டீ? நட்பு, அன்பு, நம்பிக்கை, பாசம், மத்தவங்கல புரிஞ்சுக்கறது, விட்டுக்கொடுக்கறது, வலிய தாங்கறது இதெல்லாம் தான். நான் விட்டுக்கொடுத்துருவேன். அதனால தன் ரிஸ்க் எடுக்காம இருக்க போறேன். வேற ஏதும் பெருசா இல்ல. நான் நார்மல் பெர்சன் தான்’

‘லைட்டா, நம்ம ஆளு ‘மௌனம் பேசியதே சூர்யா’ டயலாக்ஸ் வர மாதிரி இருக்கே’ சாரு கேலி செய்துக்கொண்டே கேட்டாள்.

‘ஹலோஒஒஒஒ.....’ அதட்டினாள் யாழு.

‘சரி, கூல் யாழு மா! இப்போ கல்யாணம் பண்ணிக்க போற பையன உனக்கு பிடிக்கலனா?’ சாறு மேலும் கேள்விகள் எழுப்பினாள்.

 ‘லவ் மேரேஜ் எல்லாம் சக்சஸ் இல்ல, அரேஞ் மேரேஜ் எல்லாம் பெய்லியர் இல்ல. ஒன்னு தெரிஞ்சுட்டு தப்பு பண்றது. இன்னொன்னு தப்பு பண்ணிட்டு தெரிஞ்சுக்கறது. எதுவும் நம்ம கைல இல்ல. நம்ம கைல இருக்கற பேரன்ட்ஸ் ஆச்சும் சந்தோசமா இருக்க விடுவோமே. என்ன தப்பு சொல்லு?

எல்லாரும் இங்க இன்டிபென்டென்ட் லைப் வாழப்போறோம். எனக்கு பிடிச்சது அப்பா, அம்மாவ சந்தோசமா வச்சுக்கறது. அதனால நான் கஷ்டப்பட்டா அத தாங்கவும் நான் தயார். ஏன்னா எனக்கு பிடிச்சததான் நான் பண்றேன்.

இதே தான் லவ் பண்றவங்களுக்கும். அவங்களுக்கு பிடிச்சத அவங்க பண்றாங்க. சோ அவங்க அந்த வலிய தாங்க தயார இருப்பாங்க.

 எனக்கும் அவங்களுக்கும் பெரிய வித்யாசம் இல்ல!’ முடித்தாள் யாழு.

 ‘அருமையா சொன்ன யாழு’ சாரு பாராட்டினாள்.

 காதல் விவாதம் முடிந்ததை அறிந்தார் போல ஆசிரியை முன்னே வந்தாள். கருப்பு பலகையை அழித்து விட்டு, புது முக்கோணங்களை வரைய ஆரம்பித்தாள்.

 யாழுவின் கைகள் வரைய, இதழ்கள் பாட ஆரம்பித்தது



‘எந்த வாசல் வழி காதல் நடந்து வரும்

என்று காத்து கிடந்தேன்,

அது வானில் பறந்து வந்து கூரை திறந்து வரும்

என்று இன்று தெளிந்தேன்.......’

யாழுவின் எண்ண அலைகளால் பிரமித்த சூரியன், மலைகளின் நடுவே விழ ஆரம்பித்தான்.

 பெற்றோரன்பு, சகோதர பாசம், நட்பு, காதல், எந்த வடிவ அன்பாக இருப்பினும், மற்றவர்கள் மீது நாம் வைக்கும் அன்பு, அவர்களை புண்படுத்தாமல், அவர்களின் ஆசைகளுக்கு விட்டுக் கொடுத்து, அவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, அவர்களின் ஆனந்தத்துக்கும், துக்கத்துக்கும் துணை புரியும் படி இருந்தால் துன்பம் என்பதே இவ்வுலகில் சஞ்சரிக்காது.



அளவற்ற அன்பு தான் துன்பங்களையும் , வலிகளையும் உருவாக்குகிறது.

‘அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு’



உலா தொடரும்....



Comments

Popular posts from this blog

வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?

திரு;மதி!

துயரம்