கானல் நீர் கனவுகள்
சென்னை மாநகரத்தின் புறநகர் பகுதி உறங்கும் நேரம், இரவு ஒன்பதாக இருந்த காலம் அது. எண்பது களில் கட்டப்பட்ட
இரண்டு அடுக்கு மாடி வீட்டின், ஒரு பத்துக்கு
பன்னிரண்டு அறையில், சுவரின் உள்ளே
பொருத்தப்பட்ட மங்கலாக இரவு விளக்கு வெளிச்சம் உலாவ தயாராகிக்கொண்டிருந்தது.
அந்த அறையில், பழுப்பு நிற
பாயின் மேல் விரிக்கப்பட்ட தடியான போர்வை படுக்கையில், நான்கு வயது மழலையும், நாற்பது வயது இளம் பாட்டியும் கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். அந்த மழலை பாட்டியின்
கன்னத்தை தடவி, எழில் அழியா பாட்டியின்
கதைகளையும், தாலாட்டையும் கேட்டு
துயில் கொள்ள ஆயத்தமானள்.
‘செல்லம்மா, கண்ணு முடிக்கோ. நானு கதை சொல்றேன். கேளு” பாட்டியின் கதை
கேட்க மர ஜன்னல் வழியாக தென்றலும் அதன் செவியை நுழைக்க முயற்சி செய்துக்
கொண்டிருந்தது.
“சரி மா” கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள் அந்த சிறு
பொன்வண்டு.
“ஒரு ஊர்ல பாபு ன்னு ஒருத்தர் இருந்தாரு, அவருக்கு இரண்டு பசங்க” நாள் முழுவதும் வேலை செய்து
ஒய்ந்து போன அந்த கைகள், சற்றும்
தளராமல் மழலையின் மார்பில் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.
“ஹ்ம்ம்” கூர்ந்து கவனித்த படி அவள் மனக்கண்ணில் பயணிக்க
ஆரம்பித்தாள்.
“அவருக்கு கல்யாணம் ஆகி, ஒரு பொண்ணு, ஒரு பையன் பொறந்தங்க.
பொண்ணு பேரு கலை. பையன் பேரு யுவன்.” மழலையின் முகத்தை பார்த்த படி அவள் கதையை
தொடர்ந்தாள்.
அந்த குட்டி புன் முறுவலுடன் கேட்டுக் கொண்டிருந்தது.
அதற்கு கதை எங்கே போகிறது என்று கணித்த சந்தோஷம். முடிவு தெரிந்தும், அதை காத்திருந்து காண்பது இளம் வயதிலிருந்தே மானுடத்துக்கு
புகுத்தப் பட்ட ஒரு விஷயம்.
“ அந்த கலை க்கு கல்யாணம் ஆகி ஒரு அழகான பொண்ணு
பொறந்துச்சு. அவ பேரு....” முடிக்கும் முன்னே கண்ணை திறந்து சிரிக்க ஆரம்பித்து
விட்டாள் அந்த மழலை.
“பாட்டி எப்போ பாத்தாலும் இதே கதையே சொல்ற. கதையெல்லாம்
வேணாம் நீ பாட்டு பாடு. நான் துங்கறேன்” சிரித்துக் கொண்டே கூறியது அந்த குழந்தை.
“சரி மா” இளம் பாட்டியின் இதழ்கள் மழலையின் நெற்றியில்
மலர்ந்தது.
“வாழ்வும் ஆனவள் துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தவள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னை தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே, ஜெய தேவி துர்க்கையே....”
மழலையும் கண்களை மூடிக்கொண்டு, காலெண்டரில் அவள் பார்த்த துர்க்கையின் படத்திலிருந்து ஒளி கிளம்பி வருவது போல மனகண்ணில் ஒரு கனவை உருவாக்கிய நிலையில் நித்திரையில் ஆழ்ந்தாள்.
இருபது வருடங்கள் கழித்து துங்கா நகரமான நீயூ யார்க்கின் புற நகரில், ஒற்றை மர கட்டிலின் மெத்தையில் அந்த மழலை மங்கையாக, போர்வையை போர்த்திக் கொண்டு விழித்திருந்தாள். குறுஞ்செய்திகள் கதை சொல்ல அலை பேசி வழியாக மொய்த்துக்
கொண்டிருந்தது. பக்கத்து
அறையில் “செப் ஒப் யு” (Shape of you) ஆங்கில பாட்டு
ஒளித்துக் கொண்டிருந்தது.
அவளின் நான்கு வயது துர்க்கா கனவுகள் மீண்டும் வராதா என்ற
அந்த ஏக்கத்தோடு எண்ணங்களை எழுத்துக்களாக்கிக்கொண்டிருந்தாள் அவளின் டைரியில்.
“கனவுகள் நிஜமாகும் தருவாயில், கனவுகளை கொடுத்த நிஜங்கள் கனவாவது தான் யதார்த்தம். சில
சமயங்களில் யதார்த்தத்தை விட்டு தள்ளி வருகையில் தான் மனத் திருப்பதி கிடைக்கிறது. இன்று பாட்டி என்னுடன் இல்லை. அவள் மீது அளவற்ற அன்பு கொண்ட
துர்க்கை அவளை அழைத்துக் கொண்டாள். அனால்
அவள் என் மீது கொண்ட அன்பு துர்க்கையையும் மிஞ்சியது. எனவே என்
சிரிப்பிலும், அழகியிலும் அவளின்
சுவடுகளை பதித்து வைத்திருக்கிறாள். யதார்த்தம் மனதுக்கு வலியையும் வேதனையும் தருவது. எனவே நான்
அதை விட்டு தள்ளி இருக்கிறேன்.”
எழுது கோளை டைரியின் உள் வைத்து மூடினாள்

கனவுகள் நிஜமாகும் தருவாயில், கனவுகளை கொடுத்த நிஜங்கள் கனவாவது தான் யதார்த்தம்
ReplyDeleteஅருமையான வரிகள்😊