வல்லரசுகள் உண்மையாகவே வல்லரசு தானா?
உலக நாடுகளின் அரசியலையும், பொருளாதாரத்தையும் பற்றி நான் பொதுவாகக் கட்டுரைகள் எழுதுவதில்லை. விழிப்புணர்வும், பொது அறிவும் இருப்பினும், கட்டுரை எழுதும் அளவு விவரங்கள் என்னிடம் இல்லை என்ற காரணத்தினால், உறவினர்கள், நண்பர்களோடுப் பேச்சை நிறுத்திக் கொள்வேன். எனினும், சில நாட்களாக மிகுந்த ஆர்வத்தோடு உலக செய்திகளைக் கவனித்து வருகின்ற எனக்கு, பல கருத்துகளை பகிர வேண்டும் என்ற ஆவல் வந்தது. இந்த உரையில், பல அரசியல் வல்லுனர்களுக்கும், ஆர்வலருக்கும், முரண் பட்ட கருத்துக்கள் இருக்கலாம். எனினும், ஒரு அமெரிக்க வாழ் நடுத்தர வர்க இந்திய பிரஜையாக, நான் கண்டதைப் பகிர விரும்புகிறேன்.
கடந்த சில வாரங்களாகக் கொரோனவை தவிர வேறு எந்தச் செய்திகளையும் நான் வாசிப்பதில்லை. நேற்று அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 80,000 தாண்டி, இப்போது 100,000 கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. குறுந்தகவல்களும், அழைப்புகளும் அக்கறையின் பேரில் இந்தியாவில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. அன்றாட வாழ்க்கை இந்தியாவில் முடங்கி இருக்க, இங்கு அன்றாட வாழ்க்கை திரும்பி வரவே வராதோ என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது.
அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவை விட அதிகமாக காரணம் என்ன?
முதலில் அமெரிக்காவை மூன்று விதமாக பிரிக்கலாம், கிழக்குப் பகுதி, மத்தியப் பகுதி, மேற்குப் பகுதி.
கிழக்கிலே நியூயார்க், நியூ ஜெர்சி, ஃபுளோரிடா, மாசாச்சூசெட்ஸ் மாகாணங்கள், மத்தியில் இல்லினாய்ஸ், டெக்ஸாஸ் மாகாணங்கள், மேற்கில் கலிஃபோர்னியா, வாஷிங்டன் மாகாணங்கள். இவை அனைத்தும் வணிகமும், மக்கள் தொகையும் அதிகமாக இருக்கும் இடங்கள். பெரும்பான்மையான உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும், இதில் ஏதேனும் ஒரு மாகாணத்துக்கு வராமல் அமெரிக்காவின் உட்புற ஊர்களுக்கு செல்ல இயலாது. மேலும் அமெரிக்காவில் ஃபோலோடிங் பாப்புலேஷன்* (Floating population) அதிகமாக இருப்பதால், உலக நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான மக்களின் போக்குவரத்து அதிகம்.
ஜனவரி 29: வாஷிங்டன் மாகாணத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து அமெரிக்க சீனா போக்குவரத்து நிறுத்தப்பட்டது. எனினும், விமான நிலையங்களில் எந்த ஒரு ஆரோக்கிய நலன் சோதனைகளும் நடைபெற வில்லை. மேலும் 14 நாள் சுயமாகத் தனித்திருத்தல் என்பது பற்றி ஏதும் அறிவிப்பு தரவில்லை.
பிப்ரவரி 22 - இத்தாலியில் ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 ஆம் தேதி க்குள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் 80 ஆகா மாறியிருந்தது. ஐரோப்ப நாடுகளில் மெதுவாகப் பரவ ஆரம்பித்தது. அதே சமயத்தில் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 தொட ஆரம்பித்தது. எனினும் அலட்சியத்தோடு இருந்த அமெரிக்கா, விமான நிலையங்களில் ஆரோக்கிய பரிசோதனை நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. பிப்ரவரி 22 ஆம் தேதி அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் வந்து இறங்கிய என் தாயாருக்கு எந்த ஒரு பரிசோதனையும் நடக்கவில்லை,
மார்ச் 12 - இத்தாலியில் 12000 மக்கள் இந்த நோயினால் பாதிக்கப் பட்டிருந்தனர். அமெரிக்காவில் 1700 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். திடீரென்று அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் நோய் விரைவாக பரவ ஆரம்பித்தது. அமெரிக்கா அன்று தான் சுதாரித்து, ஐரோப்ப விமான போக்குவரத்துகள் நிறுத்தியது. அதுவும் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே இருந்தது. இதற்கு முன்பு இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய அமெரிக்கர்களுக்கு பரிசோதனை ஏதும் பெரிதாக நடைபெறவில்லை. 14 நாட்கள் தனித்திருக்கவேண்டும் என்ற அறிக்கையும் பயணிகளுக்கு கொடுக்கவில்லை.
மார்ச் 13 - அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2249 ஆக உயர்ந்தது. பன்னாட்டு நிறுவனங்களும், பெருநிறுவனங்களும் வீட்டில் இருந்து வேலை செய்யும்படி ஐம்பது சதவீதம் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டது. ஆன்லைனில் பாடங்கள் நடத்த திட்டமிட்டனர். எனினும் உள்நாட்டு விமான சேவைகள் துண்டிக்க படவில்லை.
மார்ச் 20 - நியூயார்க், நியூஜெர்சி மாகாணங்கள், அதிகமாக பாதிப்புக்குள்ளானது. அமெரிக்காவில் சுமார் 20000 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர், 272 பேர் இறந்தனர். அன்று வெகு சில மாகாணங்களே ஸ்டேஅட்ஹோம் (வீட்டை விட்டு வெளியே வர கூடாது) என்ற தடையை அமலுக்கு கொண்டுவந்தது. வெளிநாட்டு விமான சேவைகள் முற்றிலும் துண்டிக்கப் பட்டனர்.
மார்ச் 27 (இன்று) - இப்போது 100000 மேற்பட்ட மக்கள் அமெரிக்கா எங்கும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்து என் தாயகமாக நான் கருதும் நியூ யார்க்கும், நியூ ஜெர்சியும், நாட்டின் பாதி நோயாளிகளை கொண்டு சின்னா பின்னமாகி வருகிறது. அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் தொகையில் எட்டாவது இடத்தில் இருப்பினும், ஸ்டேஅட்ஹோம் என்ற சட்டத்தை இன்னும் என் மாகாணம் பிறப்பிக்க வில்லை. 55% மக்களே வீட்டில் அடங்கி இருக்கின்றனர். மீதம் உள்ள அனைவரும், அறியாமையில் அலைபவர்களாய் உள்ளனர். கண்டிப்பான சட்டம் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. இன்னும் உள்நாட்டு விமானங்கள் நிறுத்தப்படவில்லை.
சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் மட்டுமே இந்த நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ வசதிகள் தட்டுப்பாடு, மருத்துவ பணியாளர்கள் தட்டுப்பாடு என திண்டாண்டிக் கொண்டிருக்கிறது. முடிந்த வழக்குகளில் (குணமடைந்தவர்கள் + இறந்தவர்கள்) 70% இறப்பு விகிதமாக நிலவி வருகிறது. இதை ஏதும் கருத்தில் கொள்ளாமல், ஸ்ப்ரிங் பிரேக், மார்டிக்ராஸ் என கொண்டாட்டங்கள் நடந்து முடிந்து வீடு திரும்பும் விழிப்புணர்வற்ற பொதுமக்கள்.
விழிப்புணர்வு தர வேண்டிய அரசு, இந்த நேரத்தில் வணிகமும் வர்த்தகமும் எப்போதும் போல செயல் பட ஆரம்பிக்க போகிறது என்று ஒரு புறம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மாகாணங்களில் உள்ளிருப்பு அறிவுறுத்தாமல், பயனற்ற வயதானோர் நலனுக்காக, பயனுள்ள வணிகத்தை நிறுத்த மாட்டோம் என்று ஆளுநர்கள் அறிவுறுத்துகின்றனர். வணிகமும் வர்த்தகமும் இல்லையேல் மக்கள் தற்கொலை செய்துக் கொள்வர் என அரசு நிர்வாகிகள் சொல்லுகின்றனர். நாட்டை உள்ளிருப்புச் செய்ய முடியாது என்று கண்டிப்பாக இருக்கும் அதிபர்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டு, பொருள் வாங்க வெளியே செல்ல பயந்து வீட்டில் இருக்கும் பாவமான அமெரிக்க வாழ் இந்திய பிரஜைகள்.
இதுதான் வல்லரசு நாட்டின் நடைமுறையா??
பொருளாதார பலம், இராணுவ பலம், தொழிலநுட்ப பலம்…… இவை அனைத்தும் மக்களுக்கு நலன் அளிக்காமல் இருப்பின்,
வல்லரசு உண்மையாகவே வல்லரசு தானா?
மனிதர்களை அழித்து பொருளாதாரத்தை வளர்க்கும்
வல்லரசு உண்மையாகவே வல்லரசு தானா?
என் அருமை இந்தியர்களே, அமெரிக்கர்களும் 100,000 நோயாளிகளை தொட்டும், எடுக்காத கடும் முயற்சிகளை நம் அரசு எடுத்துள்ளது. தயவு செய்து, 21 நாட்கள் உள்ளிருப்பை மதித்து, அரசு விதித்த நடைமுறைக்கு பணிந்து நடக்கவும்.
இந்தியா 2020ல் வல்லரசு இல்லை என்றாலும்,
நல்லரசு என்ற நிலையை அடைய,
நமக்கு கிடைத்த வாய்ப்பை,
நழுவ விடாதீர்!
இப்படிக்கு
-அயல்நாட்டில் பயந்து பயந்து வாழும் ஒரு இந்திய பெண் நான்.
Reference: https://coronavirus.1point3acres.com/

அருமையான பதிவு....
ReplyDeleteமிக அருமை......
ReplyDelete